உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை எம்பியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய வில்சன் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப். 4) அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.
துணை வேந்தர் நியமனம், கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, டிஎன்பிஎஸ்சி பணி நியமனம் உள்பட எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. இப்படி ஒரு வழக்கை தொடர எங்கள் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
அவர் வழங்கிய ஆலோசனையின் படி தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதன்மூலம், அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார்.
நாங்கள் 2023-ல் வழக்கு தாக்கல் செய்தோம். அதற்கு முன்பே 2 ஆண்டுகாலமாக 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததால், உச்ச நீதிமன்றமே 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அந்த மசோதாக்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இனி இதற்கு ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. மேலும், இனி எந்த ஒரு ஆளுநரும் அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதை மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த கட்டத்தில் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கலாம் என்பதையும் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அதன் மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கும் முடிவை ஆளுநர் எடுத்தால் அதனை 3 மாத காலத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, இன்று முதல் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார். இனி தமிழ்நாடு அரசு யாரை முன்மொழிகிறதோ அவர்தான் வேந்தராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.