டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, மதுபானங்கள் கொள்முதல் செய்தது மற்றும் பார்களுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகவும் அறிக்கை வெளியிட்டு குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில்தான், அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இதையடுத்து வேறு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை சற்று நேரம் தள்ளிவைக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் தடுப்பதாகவும், உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாகவும் அரசு வழக்குரைஞருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.
வழக்கு நிலுவையில் இருந்தபோதே, உச்ச நீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால், இந்த வழக்கை இன்று விசாரிக்க பட்டியலிட்டிருக்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல், இந்த மனு பொதுமக்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞர், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவே வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும், எடுக்காவிட்டாலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதங்களை எடுத்துவைத்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.