அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஊனமுற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு `ஊனமுற்றோர்’ என்ற சொல்லையே தவிர்த்து `மாற்றுத் திறனாளிகள்’ என குறிப்பிட்டதோடு, அத்துறையின் பெயரையும் மாற்றுத் திறனாளிகள் துறை என மாற்றினார். மேலும், அத்துறைக்கு அவரே பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார். அதேபோன்று, தற்போதும் திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் மூத்த அரசியல்வாதியும் அமைச்சருமான துரைமுருகன் சிறிது கூட யோசிக்காமல் சட்டவிரோதமாக மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு அரசியல் நையாண்டி செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாற்றுத் திறனாளிகள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் ஊனத்தை குறிப்பிட்டு இழிவுபடுத்தி புண்படுத்திப் பேசியதற்கு அவர் பொதுவெளியில் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.