உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது: பினராயி விஜயன்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:-

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்த தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது கவனிக்கத்தக்கது.