உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி: கனிமொழி!

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதால் அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று முக்கியமான தீர்ப்பினை அளித்துள்ளது. தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்றும் மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலினின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.