தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்துவிட்டது: செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்துவிட்டதாக கருதுகிறேன். தனது நாவன்மை காரணமாக எண்ணிலடங்காத இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்தவர் குமரி அனந்தன் என்று அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தமிழக மக்களால் பேரன்போடு இலக்கியச் செல்வர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக தமது 93-வது வயதில் காலமான செய்தி கேட்டு வருத்தமும், துயரமும் அடைந்தேன். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறுகிற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க இருந்த நிலையில் இடிபோன்ற துயரச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்துவிட்டதாக கருதுகிறேன். செய்தி கேட்ட உடனே விமானம் மூலமாக சென்னைக்கு வருகை புரிந்து இன்று மாலை நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறேன்.

இளமைப்பருவம் முதல் தேசியத்தையும், தமிழையும் இரு கண்களாக கருதி பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் இயக்கத்திற்கு அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக குமரி அனந்தன் பொறுப்பு வகித்தபோது தனது நாவன்மை காரணமாக எண்ணிலடங்காத இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 75-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர்.

கங்கை, காவிரி மற்றும் நதிகள் இணைப்பு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு சிலையும், நினைவு மண்டபமும் அமைத்தல், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரை சூட்டுதல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. கோவை சிறையில் இழுத்த செக்கை சென்னைக்கு கொண்டுவந்து நினைவு மண்டபம் அமைத்தல், காமராஜர் சமாதியில் அணையா விளக்கு, நினைவிடத்தில் ராட்டையை பொறித்தல், நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுகிற உரிமையை பெற்றது, காந்தி மண்டபத்தில் தியாகிகள் மற்றும் செண்பகராமன் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைத்தல் ஆகியவற்றிற்கான கோரிக்கையை எழுப்பி போராடி அதனை வெற்றிகரமாக பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன்.

தமது வாழ்நாளில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 17 முறை, மொத்தம் 5,548 கிலோ மீட்டர் பாதயாத்திரை நடத்தி தம்மை வருத்திக்கொண்டவர். அவரைப்போல கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை நடத்தியவர்கள் எவருமே இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி சாதனை படைத்தவர்.

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது இளமைக்காலம் முதல் தொண்டால் பொழுதளந்த மிகச்சிறந்த காந்தியவாதியான குமரி அனந்தன் தமது இறுதி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர். அவரது மறைவு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். குமரி அனந்தன் அவர்களது மறைவையொட்டி காங்கிரஸ் கட்சி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை, சாலிகிராமம், 4-வது தெரு , 7/4 லோகய்யா காலனி வீட்டில் இருந்து புறப்படுகிற இறுதி ஊர்வலத்தில் நான் பங்கேற்பதோடு பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் மறைந்த ஒப்பற்ற தலைவருக்கு அஞ்சலி செலுத்த வருகை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.