தி​முக ஆட்​சி​யில் 4 ஆண்​டு​களில் 32 கலைக் கல்​லூரி​கள் திறப்பு: அமைச்​சர் கோவி.செழியன்!

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசும்போது, அந்தியூரில் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2022-23 கல்வியாண்டு முதல் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. திமுக அரசு அமைந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இக்கல்லூரிகளில் தற்போது தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில் சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தற்காலிகமாக இக்கல்லூரி அந்தியூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டும் என்றும், முதுகலை பட்டங்களுக்கான பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் என்றும், அத்தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். இக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டிடம் கட்டப்பட்டபின் தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவும், முதுகலைப் பட்டங்களுக்கான பாடப்பிரிவும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.