சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி 1,299 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் என்றும் திறந்த நிலை பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது தளர்வு வழங்கி புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு கல்வி தகுதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு காவல் துறையில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட இருக்கிறது. இதில் 53 இடங்கள் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான பின்னடைவு பணியிடங்கள் (பேக்-லாக் வேகன்சி) ஆகும். ஆண், பெண் இருபாலரும் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30, பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் 3-ம் பாலினத்தவருக்கு 35, ஆதரவற்ற விதவைகளுக்கு 37. குறிப்பிட்ட உடற்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 7 சதவீத ஒதுக்கீடு உண்டு. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு (ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விண்ணப்பம் உரிய கல்வித்தகுதியும் உடற்தகுதியும் உடைய பட்டதாரிகள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnusrb.tn.gov.in) பயன்படுத்தி ஏப்ரல் 7-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (விண்ணப்பிக்க தொடங்கிவிட்டார்கள்). விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3-ம் தேதி ஆகும். விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வும் அதைத்தொடர்ந்து, உடற்தகுதி தேர்வும், இறுதியாக நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, உடற்தகுதி, காலியிடங்களின் விவரம், தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்” இவ்வாறு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான அன்றே வயது தளர்வை அறிவிக்க வேண்டும் அன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கோரிக்கை வைத்தனர். வயது காரணமாக காவல்துறையில் சேர முடியாமல் தவிக்கும் பலரும் அரசுக்கு கோரிக்கைவைத்தனர். ஏனெனில் கடந்த ஆண்டு நடத்தப்படாததால் பலருக்கு வாய்ப்பு பறிபோய் உள்ளது. இதை நிவர்த்தி செய்ய வயது தளர்வு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பிரதீப், திலகராஜன், வேல்முருகன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் சப்இன்ஸ்பெக்டர் தேர்வு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், “தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 1,299 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல கடந்த ஆண்டும் அறிவித்தனர். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு நடத்தப்படவில்லை. எனவே வயது தளர்வு வழங்கினால் மட்டுமே தேர்வுக்கு தயாராகி வரும் பலர் இந்த பதவிக்கு போட்டியிட முடியும். இல்லையெனில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழப்பார்கள். எனவே சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 4-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும். திறந்த நிலை பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது தளர்வு வழங்கி புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பட்டு தேவானந்த் , இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வருகிற ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.