வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து பா.ஜனதா நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்!

வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதா 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று சட்டமாக மாறி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சூழலில் வக்பு திருத்த சட்டம், முஸ்லிம்களின் மத உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

இதன்படி வருகிற 20-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, பா.ஜனதா தலைவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்றும், வக்பு திருத்த சட்டத்தின் நன்மைகளை, குறிப்பாக முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேசுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வக்பு சட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளும், அதற்கு பதிலடியும் என கேள்வி-பதில் வடிவத்தில் துண்டறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை உருது மொழி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா பொதுச்செயலாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தவைர் ஜமால் சித்திக் உள்ளிட்டோரிடம் பிரசாரத்தை பரப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தின் தொடக்கமாக டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அப்போது பேசிய ஜே.பி.நட்டா, “வக்பு சொத்துகள், செல்வாக்கான ஒரு சிறு குழுக்களிடையே சிக்கி உள்ளன. அவர்களிடம் இருந்து சொத்துகளை விடுவித்து, ஏழை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் நலனுக்காக பயன்படுத்துவதே வக்பு சட்டத்தின் நோக்கம். வக்பு வாரியங்களில் நியமிக்கப்படும் பிற மதத்தினர், சொத்து நிர்வாகத்தை மட்டுமே கவனிப்பார்கள். மத விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். ஆனால், ஓட்டு வங்கிக்காக எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களிடம் வதந்தி பரப்புகின்றன” என்று கூறினார்.