பொன்முடி வேணும்னே பேசியிருக்கமாட்டார்: அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் பொன்முடி பேச்சுவாக்கில் டங் ஸ்லிப்பாகி பேசி இருக்கக் கூடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் பொன்முடியை கண்டித்து வரும் நிலையில் ரகுபதி அவருக்கு ஆதரவாக பேசுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம். பேச்சுவாக்கில் ஸ்லிப் ஆகி இருக்கும். கேசுவலாக பேசியிருப்பார். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்லும் உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, பெண்களையும், சைவம், வைணவம் மதங்களை விலைமாது கதைகளுடன் ஒப்பிட்டும் இழிவுப்படுத்தியும் பேசியிருந்தார். இது தொடர்பாக காணொலி வைரலாகியது. இதற்கு பாஜகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொன்முடியின் திமுக துணை பொதுச் செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்தார். இதையடுத்து தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த ஆலோசனையில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சி பதவி போன நிலையில் அமைச்சர் பதவியை காத்துக் கொள்ள விழுப்புரத்தில் இருந்து விளக்கம் தருவதற்காகவே சென்னைக்கு பொன்முடி வந்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய அமைச்சர் பதவியையும் சேர்த்து பறிக்க வேண்டும் என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் அமைச்சர் ரகுபதி, பொன்முடி கேசுவலாக பேசியிருப்பார் என ஆதரவு தெரிவிப்பது போல் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.