பெண் காவலரை ஓபன் மைக்கில் வெளுத்து வாங்கிய வருண்குமார் டிஐஜி!

அரியலூரை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து அரியலூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்த போது அவரிடம் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் அருவருக்கத்தக்க, தகாத வார்த்தையில் பேசிய நிலையில் அதை குறிப்பிட்ட டிஐஜி வருண்குமார் ஓபன் மைக்கில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் உதவி பெண் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுமதி. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சுமதியிடம் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அவர் அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அடுத்து அவர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் சுமதியிடம் பேசியுள்ளார். அப்போது சுமதி, அந்த பெண்ணை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆடியோ ஆதாரத்துடன் அந்த பெண், டிஐஜி வருண்குமாருக்கு புகார் அளித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வருண்குமார், ஓபன் மைக்கில் சென்று காவலர்களை கண்டித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆடியோவை ஓபன் மைக்கில் வெளியிட்ட நிலையில் அதில் நடந்த உரையாடல் குறித்து பார்க்கலாம்.

டிஐஜி வருண்குமார்: என்ன பர்போஸுக்காக மகளிர் காவல் நிலையத்தை அரசாங்கம் உருவாக்குனாங்க. எந்த எண்ணத்திற்காக உருவாக்கினார்கள்.

பெண் காவலர்: சார் பெண்கள் யாராவது பிரச்சினையில் இருந்தார்கள் என்றால் அதை தீர்ப்பதற்காக ஏற்படுத்தினாங்க.

டிஐஜி: அது அந்த ஆய்வாளருக்கு தெரிந்தால் நல்லது. உங்க ஸ்டேஷன்ல சுமதினு யாராவது இருக்காங்களா?

பெண் காவலர்: சுமதி என ஒரு எஸ்எஸ்ஐ இருக்காங்க சார். கோர்ட் பார்த்துகிட்டு இருக்காங்க.

டிஐஜி: அந்த பெண்ணை உடனே சஸ்பெண்ட் செய்யணும். பாலியல் வழக்கில் புகாரோட வந்த ஒரு பெண்ணிடம் அந்த பெண் காவலர் தவறாக பேசியிருக்காங்க அதை பிளே செய்கிறேன் கேளுங்க என கூறிய அந்த ஆதார ஆடியோவை டிஐஜி பிளே செய்தார். (ஹலோ மேடம் நேற்று என்னை ஸ்டேஷனுக்கு வர சொல்லியிருந்தீங்க, எனக்கு உடம்பு சரியில்லை அதனால் வர முடியவில்லை. இன்னைக்கு வரலாமா என அந்த பெண் கேட்க, அதற்கு சுமதி, நீ எல்லாம் திமிரு எடுத்து ஆடுறடி, நீ வந்தா என்ன வராட்டி என்ன என கேட்டுவிட்டு அத்துடன் தகாத வார்த்தையை அவர் உபயோகப்படுத்தினார்)

டிஐஜி: இது கேட்டுச்சா

பெண் காவலர்: கேட்டுச்சு சார், அஜாக்கிரதையா பேசினாங்க, பப்ளிக் கிட்ட நல்ல முறையில் பேசவில்லை.

டிஐஐி: அஜாக்கிரதையா பேசல, அயோக்கியத்தனமா பேசுறாங்க. இந்த பாஷையில்தான் பெண்களிடம் பேசுகிறீர்களா, அதற்குத்தான் உருவாக்கினாங்களா?

பெண் காவலர்: சார் அப்படி ஏதும் பேசவில்லை, தெரியாம பேசியிருப்பாங்க சார் சாரி

டிஐஜி: வெட்கமா இல்ல, உங்களுக்கு இன்ஸ்பெக்டர்னு சொல்லிக் கொள்ள, தெரியாமல் பேசியிருப்பாங்கன்னு சொல்றீங்க, நீங்கள்தான் முதல் குற்றவாளி, ஆமா பேசினது தப்புதான்னு சொல்ல முடியவில்லை என்ன ஆய்வாளர் நீங்க, மைக்கில் பதில் சொல்றீங்களா, அல்லது நேரில் நிக்க வைக்கவா?

பெண் காவலர்: பேசினது தப்புதான் சார், நான் வார்னிங் செய்து வைக்கிறேன்.

டிஐஜி: அந்த காவல் நிலையத்தோட லட்சணம் தெரியுது. வரேன் ஒரு நாள் இன்ஸ்பெக்ஷனுக்கு வரேன், அப்ப இருக்கு உங்களுக்கு! அந்த அம்மாவை உடனே அனுப்புங்க, ரேஞ்சர் ஆபீஸ்ல வந்து நிக்கட்டும், இங்கு இருக்கும் பெட்டிஷன்களை எல்லாம் ஹேண்டில் செய்ய வைக்கிறேன். அதுக்கு அப்புறம் தொலைவான மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தருமபுரிக்கு போகணும். அந்த அம்மா எந்த டூட்டில இருந்தாலும் துரத்தி விடுங்கள். ஆர்டர் வரும். இந்த மாதிரி காவல் துறையில் அத்துமீறல் பேச்சு இருந்தா இனி மைக்கில் வந்து அந்த ஆடியோ பிளே செய்யப்படும், மாவட்டத்திற்கு சொல்லிடுங்கள் என வருண்குமார் ஐபிஎஸ் எச்சரித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.