அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்திற்கு தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கார்னகி இந்தியாவின் வருடாந்திர உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:-
அமெரிக்காவின் சமீபத்திய வரிகள், நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களில் நமது மனதை ஒருமுகப்படுத்தியுள்ளது. மேற்கத்திய பொருளாதாரங்களுடன் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நமது ஒத்துழைப்பை நாம் வளர்க்க வேண்டும்.
நமக்கு ஏற்ற நண்பர்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ளனர், அங்கு உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும், அங்கு அவர்கள் மிகவும் திறந்த நிலையில் உள்ளனர். இன்று நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நான் கூறுவேன். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்த முடிந்தால், இவை இந்த ஆண்டு நமக்கு சாதகமாக அமைந்தால், நாம் வேறு சூழ்நிலையில் இருப்போம். இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்துக்கு தயாராக உள்ளது.
அமெரிக்கா – இந்தியா இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்முயற்சி போன்ற இருதரப்பு ஒத்துழைப்பு கட்டமைப்புகளில், உள்நாட்டு பின்தொடர்தல் முக்கியமானது. ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் உண்மையான பொருளாதாரம் இரண்டையும் நாம் ஒன்றோடொன்று நகர்த்த வேண்டும். பெரும்பாலும் நாங்கள் விவாதங்களை நடத்துவோம், ஆனால் அவை திட்டங்களாக மாற வேண்டும். இல்லாவிட்டால், அந்த விவாதங்கள் தீவிரத்தின் பலனை அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.