சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் இணையாகக் கருதி பேசுவது என்பது கலாசார இனப்படுகொலையே என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் தனியார் கல்லூரியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் இணையாகக் கருதி பேசுவது என்பது கலாசார இனப்படுகொலையே. ஆளுங்கட்சியில் ஓர் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுகிறார்.
பெண்களை மட்டுமின்றி, சிவன் மற்றும் விஷ்ணுவை வழிபடுவோரின் நம்பிக்கையை அவமதித்து பேசுகிறார். அவர் ஒரு தனிநபர் அல்ல; இங்குள்ள சூழல் அமைப்பில் உள்ள ஒரு புள்ளிதான். கம்பராமாயணத்தில் பெண்களைப் போற்றியிருக்கிறார்கள்; ஆனால், இவர்கள் கம்பர் காட்டிய பாதையை அழிக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, எங்கு சென்றாலும், தமிழையும் திருவள்ளுவரையும் மையப்படுத்தி, பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவை குறிப்பிட்டு மிகவும் கொச்சையான கருத்துகளை பதிவிட்டிருந்தார். பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொலி வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளன. அரசியல் தரப்பிலும் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், தனது சர்ச்சைக் கருத்துக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாக அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டார்.