தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி மற்றும் தருண் சுக் ஆகியோர், அதற்கான சான்றிதழை நயினார் நாகேந்திரனுக்கு வழங்கினா்.
பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பதவிகளுக்கு போட்டியிடுவோர் நேற்று (ஏப்.11), மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.
மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால் அவர் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக தேசிய பொறுப்பாளர்கள், கிஷன் ரெட்டி, தருண் சுக், மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு, அவருக்கான சான்றிதழை பாஜக தேசிய பொறுப்பாளர்கள், கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர் வழங்கினர். பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரனுக்கு துண்டு அணிவித்து, பிரசாதம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பாஜக சார்பில் 67 கட்சி மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன், மேடையிலிருந்த அனைவருக்கும், புதிய பொறுப்பாளர்களுக்கும் இருகரங்களைக் கூப்பி நன்றி தெரிவித்தார்.