ஓபிசி இளைஞர்களுக்கு திறமைகள் இருந்தும் அவர்கள் முன்னேற சரியான வாய்ப்புகளும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்று ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளை வடிவமைக்கும் விக்கி என்ற இளைஞரை அவரது தொழில் வளாகத்திற்கே சென்று சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் தங்கள் பணிகளை எவ்வாறு செய்கிறார்கள் என்பதை நேரில் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து அந்த திறனை கற்க முயற்சி செய்தார். மேலும், அவரது தொழில் வளாகத்தில் எவ்வளவு பேர் பணிபுரிகிறார்கள், அவர்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள், இந்த தொழிலில் உள்ள வாய்ப்புகள், வருவாய் குறித்தெல்லாம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், திறமைகள் இருந்தும் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
ஜவுளி வடிவமைப்புத் துறையில் ஒரு ஓபிசி-யை நான் ஒருபோதும் முதலிடத்தில் சந்தித்ததில்லை என இந்தத் துறையில் தனது திறமையின் அடிப்படையில் தனது தொழிலைக் கட்டியெழுப்பியுள்ள விக்கி என்ற இளைஞர் கூறுகிறார். அவரது தொழிற்சாலையில் உள்ள கைவினைஞர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடினமாக உழைக்கிறார்கள். ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தி மாயாஜாலம் செய்கிறார்கள் – ஆனால் அவர்களின் பொருளாதார நிலைமை அப்படியே உள்ளது, அவர்களின் திறமை பாராட்டப்படுவதில்லை! மற்ற தொழில்களைப் போலவே, ஜவுளி மற்றும் ஃபேஷன் துறையிலும், பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவமோ, கல்விக்கான அணுகலோ, வலையமைப்பில் இடமோ இல்லை.
விக்கி போன்ற திறமையானவர்களை நான் சந்திக்கும் போது, இந்திய இளைஞர்களின் உண்மையான திறமையை உலகம் காணும் வகையில் அவர்களின் படைப்புகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். திறமையானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருந்தபோதிலும், இந்த இளைஞர்கள் புறக்கணிப்பு மற்றும் அநீதியின் சிக்கலில் அபிமன்யுவைப் போல சிக்கி உள்ளனர். அவர்களுக்கு முன்னேற சரியான வாய்ப்புகளும் ஊக்கமும் வழங்கப்படுவதில்லை. இந்த தீய வட்டத்தை உடைப்பதே எனது போராட்டம். இதன் மூலம் ஒவ்வொரு திறமையான நபரும் இந்த அமைப்பிற்குள் நுழைவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.