பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

“பொதுமேடையில் கீழ்த்தரமாக பேசிய அமைச்சரை, கட்சிப்பதவியிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது, அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் திமுக அரசும் அதன் தலைவரும் ஆதரிப்பதாகத்தான் அர்த்தம்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று (ஏப்.12) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. இதில் தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினார். அப்போது, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்ஏ.க்கள், எம்.பிக்கள் குறிப்பாக அமைச்சர்கள் அனைத்து மதமும் சம்மதம் என்ற முறையில் செயல்பட வேண்டும் என்பது விதி. துரதிருஷ்டவசமாக திமுக அமைச்சர் ஒருவர் கட்சியில் முக்கியப் பதவியிலிருப்பவர் ஒரு மதத்தை பற்றி பொறுப்பற்ற முறையில் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க, முகம் சுளிக்கும் வகையில் பொதுமேடையில் பகிரங்கமாக பேசியிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம். அவரை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கினால் போதாது. அமைச்சர் பதவியிலிருந்தும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி நீக்கவில்லையென்றால் திமுக அரசும், அதன் தலைவரும் அவரை ஆதரிப்பதாகத்தான் அர்த்தம். தமிழகத்திலுள்ள மகளிரை கொச்சைப்படுத்துவதாக அர்த்தம். உடனடியாக அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தமாகா என வலியுறுத்துகிறது.

அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. தேசிய அளவில் என்டிஏ வலுவாக உருவாகத் தொடங்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்திற்கு வந்து அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் தோல்வி பயம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அந்த தோல்வி பயத்தால் கண்மூடித்தனமாக பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி. ஏற்கெனவே இருந்த கூட்டணி, வென்ற கூட்டணி. மீண்டும் தமிழகத்தில் அவசிய அவரசத் தேவைக்காக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவரும் திமுக அரசை அகற்றும் வகையில் தமிழகத்தில் மீண்டும் கூட்டணி உருவெடுத்துள்ளது. அதில் தமாகா கூட்டணியின் முக்கிய கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அமைச்சரை சந்தித்து பேசினேன்.

மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக என கூட்டணி அச்சாரம் போடப்பட்டுள்ளது. தமிழக மக்களின் எண்ணப்படி ஒத்தக்கருத்துடைய கட்சிகள் சேரும் நாட்கள் வெகுதூரத்திலில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தின் முதல் அணியாக வெற்றி அணியாக தமிழகத்தை வலம் வரும். அதன்படி பல கட்சிகள் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நிலையை பார்ப்பீர்கள். வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதில் உறுதியாக இருக்கும் கூட்டணி. திமுகவைப்போல் ஒரு மதத்தை இழிவுபடுத்தும் கூட்டணியல்ல. இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு கூட்டணி திறந்தே இருக்கும். நாட்டின் நலன் கருதி மற்ற கட்சிகள் ஒத்தக்கருத்தோடு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது, பொறுத்திருந்து பாருங்கள்.

வக்பு வாரியத்தின் மசோதா மூலம் எளிய ஏழை நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கும் மாணவ, மாவணவிகளும் பயனடைவார்கள் என்ற முறையில் அந்த மசோதாவைப் படித்துப்பார்த்து லட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகள் கிடைக்க வண்டும் என்ற அடிப்படையில் நான் வாக்களித்திருக்கிறேன். எமர்ஜென்சி காலத்தைவிட திமுகவுக்கு மோசமான கால கட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.

திமுக என்றால் காங்கிரசுக்கு சிம்ம சொப்பனம். அவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக காங்கிரஸ் கூட்டணியை விட வேறு உதாரணத்தை சொல்ல முடியாது. மறைந்த தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பார்த்து வெறுத்துப்போய், திமுகவுக்கு கொடுத்த சங்கடங்களை பார்த்து கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னதை நான் நினைவுகூர விரும்புகிறேன்.

தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழங்கு மிக மோசமாக இருக்கிறது என்றால் அது தமிழகம்தான். கொலை, கொள்ளை திருட்டு, போதைப்பொருள் கலாச்சாரத்தை வளரவிட்டு அதை நிறுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு. இது தமிழகத்திற்கு தலைகுனிவு. திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. அப்போது வாக்காளர்கள் திமுக அரசு மீதான கோபத்தை வாக்கின் மூலம் வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.