எண்ம முறையில் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். எங்குமே பணம் கொண்டு செல்வதில்லை, கையில் போன் இருக்கிறது என்று தைரியமாக வெளியே கிளம்பியவர்கள் பலரின் நிலைமை இன்று துயரமாக மாறியிருக்கிறது.
நாடு முழுவதும் இன்று முற்பகல் முதல் யுபிஐ முறையில் பணப்பரிவர்த்தனைகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதை என்பிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், பிரச்னையை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருக்கிறது.
இது குறித்து என்பிசிஐ தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டு, என்சிபிஐ பிரச்னையை சந்தித்துள்ளது. இதனால், பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகள் ரத்தாகின்றன. இந்த கோளாறை சரி செய்வதற்காக பணியாற்றி வருகிறோம். சரியானதும் இது குறித்து தெரிவிக்கப்படும். இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் முதலே, ஏராளமான பயனர்கள் மிகச் சிறு தொகையைக் கூட அனுப்ப, பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சிலருக்கு, பணம் அனுப்புபவரின் வங்கி நெட்வொர்க் செயலிழந்திருப்பதால், உங்களால் பணம் அனுப்ப இயலாது என்று தகவல் வருவதாகவும், ஒரு சிலருக்கு, பணம் அனுப்ப முயலும்போதே வேறு வங்கிக் கணக்கிலிருந்து முயற்சிக்கலாம் என்ற தகவல் வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதமும், யுபிஐ சேவை பாதிக்கப்பட்ட நிலையில், வார இறுதி நாளில் இவ்வாறு யுபிஐ சேவை பாதிக்கப்பட்டிருப்பது பயனர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.