6 மாதகாலத்திற்கு கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம்: பிரேமலதா!

”6 மாதகாலத்திற்கு கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. நாங்கள் யோசித்து, நிதானமாகவே முடிவு செய்வோம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், ஆதிமுக-பாஜக கூட்டணி, தேமுதிகவின் தேர்தல் திட்டங்கள், மற்றும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பிரேமலதா, “நேற்று அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியதாக தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன். அது அவர்கள் இரு கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப் பற்றி நாங்கள் எந்த கருத்தும் இப்போது சொல்ல முடியாது” என்றார். மேலும், “அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தி பேசியவை எங்களுக்கு தெரியாது. யூகங்களின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது” என தெளிவுபடுத்தினார்.

தேமுதிகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விளக்கிய பிரேமலதா, “ஏப்ரல் 30 அன்று தர்மபுரியில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை நடத்தி உள்ளோம். தேமுதிகவைப் பொறுத்தவரை, எங்கள் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சி பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார். “ஏப்ரல் 30-ல் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய பதவிகள் அறிவிக்கப்படும். அதற்குப் பிறகு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்று கூறினார்.

”6 மாதகாலத்திற்கு கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. நாங்கள் யோசித்து, நிதானமாகவே முடிவு செய்வோம்” என்றும் அவர் கூறினார்.

பாஜகவின் நெருக்கடிக்கு அதிமுக பணிந்து இருப்பதாக சொல்கிறார்களே உண்மையா? என்ற கேள்விக்கு “எடப்பாடி பழனிசாமி அவர்களிடமும், பாஜக தலைவர்களிடமும் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பது சரியானதாக இருக்காது” என பிரேமலதா கூறினார்.

ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகள் குறித்து கவலை தெரிவித்த பிரேமலதா, “தவறான செய்திகளை, உங்கள் யூகங்களின் அடிப்படையில் பரப்ப வேண்டாம். தேமுதிகவைப் பொறுத்தவரை, தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது மட்டுமே உண்மையான செய்தி” என்றார். “எத்தனை சீட்டுகள் பேசப்பட்டன என்று யூகங்களை வெளியிட வேண்டாம். முடிவு எடுத்தால், உங்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்று உறுதியளித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு, “அது அவர்களின் கட்சி முடிவு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தலைவர் இருப்பார், பின்னர் மாற்றுவது அவர்களின் கொள்கை. புதிய தலைவருக்கு தேமுதிக சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கிறோம். அவர்களின் முடிவு குறித்து எங்களுக்கு கருத்து இல்லை” என்றார்.

திமுக அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்திய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ரொம்ப கேவலமாக, அசிங்கமாக பார்க்கிறேன். இதற்கு மேல் எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார். “திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு உறுதியான முடிவு எடுத்து, பொன்முடியை பதவியில் இருந்து நீக்கி உள்ளார். அவர்கள் கட்சியே இதற்கு நடவடிக்கை எடுத்துவிட்டதால், இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. இது மிகவும் கொச்சையான, அசிங்கமான விஷயம்” என்றார்.

அதிமுக-பாஜக கூட்டணியை “துரோகம்” என கனிமொழி விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அதை கனிமொழியிடம் கேளுங்கள். ஒவ்வொரு அரசியல் நிகழ்வுக்கும் ஒவ்வொருவர் கருத்து வேறுபடும். அவர்கள் கருத்துக்கு எங்களை பதில் சொல்லச் சொல்வது சரியில்லை” என்றார். “தேமுதிகவின் கருத்து குறித்து என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்” என கூறினார்.

தமிழக அரசியலில் நிலவும் குழப்பங்கள் குறித்து பேசிய பிரேமலதா, “இன்று தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளிலும் குழப்பம் நிலவுகிறது. பாமகவில் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை, திமுகவில் அமைச்சர் பதவி நீக்கம், பாஜகவில் புதிய தலைவர், அதிமுகவில் பிளவுகள் அப்படியே உள்ளன. ஆனால், தேமுதிகவாக நாங்கள் உறுதியாக, யோசித்து, எங்கள் கட்சி வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு முன்னேறுகிறோம்” என்றார்.

முடிவில், “பத்திரிகையாளர்களாக நீங்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தவறான செய்திகளை, யூகங்களின் அடிப்படையில் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்ட பிரேமலதா, தேமுதிகவின் எதிர்கால திட்டங்கள் குறித்து உறுதியுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.