தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடி, கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கள் பாதுகாப்பு இயக்கத்தின் சேராம்பட்டு கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் என்றும் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியுள்ளதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையிலும், சேராம்பட்டு ஊர்மக்கள் முன்னெடுப்பிலும் இன்று ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறவிருக்கும் கள் விடுதலை மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் முழு ஆதரவை அளிப்பதோடு, நாம் தமிழர் கட்சி உறவுகள் நிகழ்வில் பங்கெடுத்து, மாநாடு வெற்றிபெற துணைநிற்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழந்தமிழர் வாழ்வியலில் இருந்து தமிழ் சமூகத்தின் நீண்ட நெடிய அறுபடாத மரபைக் கொண்டது பனை மரம். குறிப்பாக கள் நம் வாழ்வியலோடும் இந்த நிலத்தின் தன்மையோடும் இணைந்த உணவுப்பகுதியாகும். பல்வேறு உடல்நலக் கூறுகளைக் கொண்டதோடு, உடல் நோய்களை சரி செய்யக்கூடியப் பானமாகவும் விளங்குகிறது. அந்தந்த பருவத்திற்கான உணவை உண்பது தான் சிறந்த இயற்கை வழி வாழ்வு என்பார் வேளாண் பேராசான் நம் பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார். தமிழ்நாடு போன்ற வெப்பம் மிகுதியாக இருக்கும் பகுதிகளில் இயற்கையாகக் கிடைக்கும் நீர் சார்ந்த உணவு வகை தான் பனங்கள். இதனைக் கருத்தில் கொண்டே பனங்கள் மற்றும் தென்னங்கள் ஆகியவை பனம்பால் மற்றும் தென்னம்பாலாகத் தமிழ்த்தேசிய மதுபானங்களாக அறிவிக்கப்படும் என்றும், இவற்றால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிலும், பனை மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் வருவாய் குறித்து நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வெளியிட்ட பனைப் பொருளாதாரத் திட்ட வரைவிலும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களோ மதுபான தொழிற்சாலைகள் நடத்தி டாஸ்மாக் வழியே அவற்றினை முறை படுத்தித் தனிமனிதனுக்கும் பொது சமூகத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கின்ற சாராயம் விற்று அரசின் வருவாயை ஈட்டும் கேடுகெட்டக் கொள்கையை பின்பற்றுகின்றனர். தற்சார்பு பொருளாதாரத்தின் முதன்மை அங்கமாக விளங்கக்கூடிய பனை சார் உற்பத்தியை அரசு செயல்படுத்தாமல் இருப்பது ஒரு புறம் என்றால் அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்படும் பனையேறிகள் மீது தொடர்ச்சியான அதிகாரப் போக்கினை கட்டவிழ்த்து விடுவது மறுபுறமாக உள்ளது.
இந்நிலையில், இச்சிக்கல்களை எதிர்த்து செயல்படும் விதமாக கள் விடுதலை மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கும் தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா செ.நல்லசாமி அவர்களுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் திரு. ஈசன் முருகசாமி அவர்களுக்கும், சேராம்பட்டு கிராமத்தின் பனையேறிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, பனைத்தொழிலில் ஈடுபடும் பனையேறிகள் மற்றும் பனை, தென்னை வேளாண் குடிகள் மீது தமிழக அரசு காவல்துறையின் வழியே நடத்துகிற அடக்குமுறையைக் கைவிட்டு, கள்ளை தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் இருந்து நீக்கி கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.