தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிலரைப் போல (நடிகர் விஜய்) ஏசி கேரவனில், சொகு விமானத்தில் பிரண்ட் கூட, பிரண்ட் கல்யாணத்துக்கு போற போலி அரசியல்வாதி கிடையாது என்று திமுகவில் அண்மையில் இணைந்த அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ் சாடியுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் அண்மையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து திமுகவில் அவருக்கு உடனே கட்சிப் பதவி வழங்கப்பட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் திவ்யா சத்யராஜ் பேசியதாவது:-
தந்தை பெரியாரின் வரலாறும், திமுகவின் வரலாறும் அண்ணா, கருணாநிதியின் வரலாறுகளும் நான் கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன். அதை எழுதி வைத்து இன்று பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் மனதில் உள்ளதைத்தான் இன்று பேசப் போகிறேன். கல்லூரியில் என்னிடம் கேட்ட போது நான் கருணாநிதியின் ரசிகை என பெருமையாக சொன்னேன். ஒரு பெண்ணாக இன்று நான் மேடையில் பேசுவதற்கு காரணம் கருணாநிதிதான். அப்பா காசில் வாழாமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியம் தந்ததும் கருணாநிதிதான். சங்கிலிகளை உடைத்துவிட்டு கனவுகள் பின்னால் ஓட வேண்டும் என்கிற தைரியம் வந்ததற்கும் கருணாநிதியே காரணம்.
திமுகவின் வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும். அந்த வரலாற்றைப் படித்தால்தான் வாழ்க்கை, வெற்றி, தோல்வி, தியாகம், மனிதநேயம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். எனக்கு என்னைப் பற்றிய புரிதல் வருவதற்கு திமுகவின் வரலாறுதான் காரணம். கல்லூரி நாட்களில் என் அறையில் தந்தை பெரியார், என் அப்பா சத்யராஜ், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்கள்தான் இருக்கும்.
கேரவனில், சொகுசு விமானத்தில் பிரண்ட் கூட, பிரண்ட் கல்யாணத்துக்கு போற போலி அரசியல்வாதி கிடையாது உதயநிதி ஸ்டாலின், கடினமாக உழைக்கும் நாயகன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர். மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்கிறவர். பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த மாமன்னன். அவரை எதிர்த்து யார் எங்க நின்றாலும் டெபாசிட் பறிபோய்விடும். உதயநிதி ஸ்டாலின், யாராலும் வெல்ல முடியாத நாயகன்.
நேற்று இன்று நாளை.. நான் உயிருடன் இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் மட்டுமே என் தலைவர். அண்மையில் வாடகை ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு சொந்த ஆட்டோ வாங்கி தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உண்மையான பெண்ணியவாதி என்பதை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார். கொரோனா உச்சியில் இருந்த காலத்தில்தான் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அது சவாலான தருணம். யார் உயிரோடு இருப்பார்கள் என தெரியாத காலத்தில் முதல்வராக பொறுப்பேற்று கொரோனாவை கட்டுப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் பிரதமர் மோடியோ, பால்கனியில் ஜாலியாக நின்று விளக்கு புடிக்கலாம் என்றார். விளக்கு பிடிப்பதற்கான நேரமா அது? எல்லோரும் செத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இப்படித்தான் செய்தார் பிரதமர் மோடி. Y
அனைத்து மதங்களுக்கும் ஒரே மரியாதை தரக் கூடிய ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் மரியாதை தரக் கூடிய ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சிதான் பெண்களையும் இந்த நாட்டையும் காக்கும். இவ்வாறு திவ்யா சத்யராஜ் பேசினார்.