புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாரதி பூங்கா அருகே ராஜ்நிவாஸ் உள்ளது. இங்கு துணைநிலை ஆளுநர் அலுவலகம், மாளிகை அமைந்துள்ளது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ராஜ்நிவாஸில் அவர் ஓய்வெடுத்தார். இந்தநிலையில் ராஜ்நிவாஸ் மற்றும் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சலில் அந்த வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து பெரியகடை போலீஸாருக்கு பிற்பகலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டறியும் சாதனங்களுடன் விரைந்து வந்து ராஜ்நிவாஸில் முன்பகுதி தாவரத் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ராஜ்நிவாஸின் அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது. நீண்ட சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. சோதனையின் போது முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நாரா.சைதன்யா உள்ளிட்டோரும் ராஜ்நிவாஸுக்கு வந்து சோதனையை நேரடியாகக் கண்காணித்தனர்.
சோதனையை அடுத்து ராஜ் நிவாஸுக்கு செல்லும் சாலைகள், வீதிகளில் போலீஸார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். மேலும், அப்பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக ஒருவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம், ஜிப்மர் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனையில் அது புரளி என்பது தெரிந்தது. அதில் தொடர்புடையோர் யாரும் கைதாகவில்லை.