தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. 15,000 விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது.
தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் வரும் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
தற்போது மீனவர்கள் படகுகளை கரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 8 லட்சம் மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் முடங்குவர். ஒட்டுமொத்தமாக டெல்டாவில் மட்டும் 3,080 விசைப்படகுகள் இன்று முதல் 61 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. இதனால் 1.45 லட்சம் மீனவர், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வீடுகளில் முடங்குவர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு அதாவது 15ம் தேதி முதல் வரும் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 கடல் மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம். மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 15ஆயிரம் விசை படகுகளுக்கு மேல் உள்ளன. இதனை சேர்ந்த சுமார் 1.90 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக ரூ.8 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும் என்றனர்.