விருதுநகர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் காரிசேரி அருகே மாரியம்மன் கோயிலில் திருவிழா இன்று நடந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். இந்த விழாவுக்காக மைக் செட் அமைக்கும் பணியில் திருப்பதி (28) என்ற இளைஞர் ஈடுபட்டிருந்தார். அப்போது மைக் செட் வயர் கட்டிய போது உயர் மின்னழுத்த மின்கம்பி மீது மைக் வயர் செட் பட்டுவிட்டது. அப்போது மின்சாரம் பாய்ந்தது மைக்செட் கட்டிய திருப்பதி , 7 மாத கர்ப்பிணியான அவரது மனைவி லலிதா (25), பாட்டி பாக்கியம் (65) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றச் சென்ற இருவர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் பாய்ந்து கணவன், கர்ப்பிணி மனைவி, பாட்டி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.