அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து: நயினார் நாகேந்திரன்!

அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது. அவர் பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது. அவர் பாஜகவின் மிகப்பெரிய சொத்து. அரசியலில் நீண்ட காலமாக பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை, அரசியல் நாகரிகமான முறை யில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேசிவிட்டு, நேரடியாக அவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு இரவு உணவருந்திய பிறகுதான் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அந்த நிகழ்ச்சியில் நான், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் அய்யா ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.

மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் “ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்-அமைச்சருக்கு. ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாசாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?

தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.