மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்!

மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.

மியான்மரில், கடந்த மாதம் 29-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்தது. மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 3 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்தியாவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலால் குழப்பமடைந்த விமானிகள், அவசர கால சிக்னல்களை பயன்படுத்தி உண்மை நிலவரங்களை அறிந்து பத்திரமாக விமானத்தை செலுத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் சைபர் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். மியான்மரில் நிவாரண பணிகளில் 6 விமானங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.