பிகாரில் இம்முறை என்டிஏ ஆட்சி அமையாது: தேஜஸ்வி யாதவ்!

“எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றுபட்டு பிகாரை முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த முறை பிகாரில் என்டிஏ ஆட்சி அமையாது” என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி கூறியதாவது:-

நாங்கள் இன்று ஒரு சந்திப்பை நடத்தினோம். எங்களின் விவாதம் ஆரோக்கியமாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடனான அடுத்தக் கூட்டம் ஏப்ரல் 17-ம் தேதி பாட்னாவில் நடக்கும். எதிர்க்கட்சிகள் முழுமையாக தயாராக உள்ளன. நாங்கள் பிகாரை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். மாநிலத்தில் 20 ஆண்டுகள் என்டிஏ ஆட்சியில் இருந்து பிகார் இன்னும் ஏழை மாநிலமாகவே உள்ளது. மாநிலத்தில் தனி நபர் மற்றும் விவசாயிகளின் வருமானம் மிகவும் குறைவு. அதேபோல் மக்களின் இடம்பெயர்வு அதிகமாக உள்ளது.

நாங்கள் பிரச்சினைகளை முன்வைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம். அரசின் குறைகளை எடுத்துச் சொல்வது அனைவரின் கடமையாகும். முதல்வர் வேட்பாளர் குறித்து நாங்கள் விவாதித்து ஒருமனதாக முடிவெடுப்போம். இந்தமுறை பிகாரில் என்டிஏ ஆட்சி அமையாது. அனைத்து முடிவுகளும் வெவ்வேறு தேதிகளில் எடுக்கப்படும். நாங்கள் ஒற்றுமையாக இணைந்து என்டிஏ அரசினை எதிர்ப்போம். பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அடுத்தடுத்த நடவடிக்கைகளின்போது ஒவ்வொரு விஷயமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு தேஜஸ்வி கூறினார்.

தேஜஸ்வி யாதவ் உடனான சந்திப்புக்கு பின்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பிகாரில் இந்த முறை மாற்றம் நிச்சயம். இன்று நாங்கள் பிகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை சந்தித்தோம். மகா கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். வரவிருக்கும் தேர்தலில், பிகார் மக்களுக்கு நாங்கள் வலுவான, நேர்மையான, நலன் சார்ந்த விருப்பங்களை வழங்குவோம். பாஜக மற்றும் சந்தர்ப்பவாத கூட்டணியிடமிருந்து பிகார் விடுவிக்கப்படும்.

இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்படுபவர்கள் மற்றும் பிற சமூகத்தினரும் மகா கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

பிகாரில் இந்த ஆண்டின் இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மிகவும் தீவிரமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக அடங்கிய என்டிஏ கூட்டணி, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணி கட்சிகள் மோத இருக்கின்றன.