ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்: மு.க.ஸ்டாலின்!

ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000 ஹஜ் பயணிகள், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலமாக அதற்கான கட்டணங்களை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்து, பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 ஹஜ் பயணிகளின் புனித கடமையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் தனியார் ஹஜ் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட திடீர் குறைப்பு, ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி விரைவான தீர்வைப் பெற வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.