சீமான் பேசிய பேச்சுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்!

சீமான் பேசிய பேச்சுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சீமான் பேசிய பேச்சுக்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால், நூறு வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக அவரது பேச்சை கேட்கவில்லையா? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா? எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ஏற்கனவே நான்கு வழக்குகள் தொடரப்பட்டு அவை எண்ணிடப்படவில்லை என்று தெரிவித்தார். பின்னர் பென் டிரைவில் உள்ள அவரது பேச்சை கேட்ட பின்பு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.