அமலாக்கத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முதன்மை எதிர்கட்சியாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை முடக்குவதற்கு பல்வேறு அடக்குமுறைகளை மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் ஏவிவிட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஜவஹர்லால் நேரு உள்ளிட்டவர்களால் 1938 இல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு மிகச் சிறப்பாக வெளிவந்தது.

இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குரலாக ஒலித்தது. நேஷனல் ஹெரால்ட் உருவாக்கிய சொத்துகளை அபகரித்து, காங்கிரஸ் கட்சியின் மீது நிதி நெருக்கடியை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சர்வாதிகார, பழிவாங்கும் ஜனநாயக விரோதச் செயல்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை அதனுடைய ரூபாய் 661 கோடி மதிப்புள்ள சொத்துகளை பலவந்தமாக கைப்பற்றி, ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு சதித் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. பாஜக அரசு நாட்டை ஒரு சர்வாதிகார அரசியல் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிற நடவடிக்கையாகத் தான் இதை கருத வேண்டியிருக்கிறது. அதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பழிவாங்கும் போக்கிற்காக பயன்படுத்துகிறது.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நேஷனல் ஹெரால்ட் மீது வழக்கு தொடுத்து அதை ஒரு கருவியாக பயன்படுத்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்குகளை ஜோடித்து அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்ட் பொறுத்தவரை நொடிந்த நிலையில் இருந்த போது, காங்கிரஸ் கட்சி ரூபாய் 90 கோடி அளவில் நிதியுதவி செய்திருக்கிறது. நேஷனல் ஹெரால்ட் நேரு வளர்த்த காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாகும். அது காங்கிரஸ் கட்சியின் சொத்து. அதை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அந்த வகையில் நேஷனல் ஹெரால்ட் நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த பிரிவு 25ன்படி லாப நோக்கமில்லாத ‘யங் இந்தியா’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலமாக எந்த பண பரிவர்த்தனையும் நடக்காத நிலையில், எந்த வகையான லாபமும் ஏற்படாத சூழலில், எந்த சொத்துகளும் விற்கப்படாத நிலையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் எப்படி வழக்கு பதிவு செய்தது என்று தெரியவில்லை.

இதில் சோனியா காந்தியோ, ராகுல்காந்தியோ எந்தவிதமான பயனையும் அனுபவிக்காத நிலையில், அமலாக்கத்துறை வழக்கு தொடுத்து விசாரிப்பது பாஜகவின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி, அச்சுறுத்தி அரசியல் செயல்பாடுகளை ஒடுக்க நினைப்பது அப்பட்டமான பாசிச, சர்வாதிகார நடவடிக்கையாகும்.

இதை கண்டிக்கிற வகையில் நாடு முழுவதும் இன்று (ஏப்.16) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி இன்று மாலை தமிழகத்தின் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் இன்று மாலை சென்னை, நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் எதிரில் மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.