சீமானுக்கு ஒருபோதும் துரோகம் செய்யவே மாட்டேன்: சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்களை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒருபோதும் துரோகம் செய்யவே மாட்டேன் என்றும் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை; அந்த யூ டியூப் சேனலின் கருத்துகள், நாம் தமிழர் கட்சியின் கருத்துகள் இல்லை என கூறியிருந்தார்.

இந்த அறிக்கையை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சாட்டை துரைமுருகன், திடீரென நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்பதையும் நீக்கி இருந்தார். அத்துடன் முகப்புப் படமாக கட்சி சாராத ஒரு படத்தை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று சீமானின் அறிக்கை தொடர்பாக சாட்டை துரைமுருகன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

நாம் தமிழர் கட்சியில் இருந்து 2 முறை ஏற்கனவே நீக்கப்பட்டேன். அப்போது நான் பாடம் கற்றுக் கொண்டேன். இதேபோல 5 ஆண்டுகளுக்கு முன்னரும் என்னுடைய யூ டியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்திருந்தார். இப்போதும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது நான் பாஜகவில் இணையப் போகிறேன்; பாஜகவில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என செய்திகள் பரப்பப்படுகின்றன. நான் எம்.எல்.ஏ, எம்பி சீட்டுக்காக நாம் தமிழர் கட்சிக்கும் அரசியலுக்கும் வரவில்லை. நாம் தமிழர் கட்சியைப் பார்த்து அரசியலுக்கு வந்தேன். நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே இருப்பேன். சீமானுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யவே மாட்டேன். துரோகம் என்பது என் மரபணுவிலேயே கிடையாது. தமிழ்த் தேசியத்துக்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன். இவ்வாறு அந்த வீடியோவில் சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.