வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2-ம் தேதி மக்களவையில் வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களை கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று மத்திய அரசு கோரியுள்ளது.

இதனிடையே வக்பு திருத்த சட்டத்தை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் சட்டத்துக்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.

இந்த சூழலில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.