விசைத்தறியாளர்கள் பிரச்சினை: திருப்பூர், கோவையில் கடையடைப்பு போராட்டம்!

கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2022-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ம் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த 11-ம்தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கோவை மாவட்டம் சோமனூர், கண்ணம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இரு மாவட்டங்களிலும் 1.25 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் காரணமாக தினமும் 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி தடைபட்டு வருவதாகவும், கடந்த 25 நாட்களில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக, அவர்களுக்கு நூல் தரும் ஓ.இ. மில்களும் நேற்று உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தால் ரூ.150 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளன.

இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எம்.ஜெயபால் கூறும்போது, “ஓ.இ. மில்கள் உற்பத்தி செய்யும் நூல்களுக்கு தக்க விலை நிர்ணயிக்க வேண்டும். கழிவுப்பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட 457 சதவீத டிமாண்ட் சார்ஜ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை 6 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும். இதற்காக நடைபெற்ற ஒரு நாள் போராட்டத்தால் ரூ.2 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய போராட்டங்கள் மற்றும் நூல் விலை குறைப்பால் ரூ.182 கோடி வரை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது” என்றார்.