ரவுடி வெள்ளைக்காளியை விசாரணைக்கு அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதால் அவரிடம் காணொலி காட்சி வழியாக விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழகத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
திருச்சி குண்டூரைச் சேர்ந்த சத்யஜோதி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
எனது சகோதரர் வெள்ளைக்காளி என்ற காளிமுத்து 2019 ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். மதுரையில் கடந்த மாதம் ரவுடி கிளாமர் காளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் வெள்ளைக்காளிக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் காளி கொலை வழக்கில் ஆஸ்டின்பட்டி போலீஸார் வெள்ளைக்காளியையும் சேர்த்துள்ளனர். வெள்ளைக்காளி சிறையில் இருக்கும் நிலையில், அவர் மீது ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பல வழக்குகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
காளி வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் சமீபத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் வெள்ளைக்காளிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விசாரணைக்காக வெள்ளைக்காளியை அழைத்துச் சென்று அவரை என்கவுன்ட்டர் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே வெள்ளைக்காளியிடம் காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்தவும், அனைத்து விசாரணையையும் வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, “எத்தனை என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன? என்கவுன்ட்டர்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். சுட்டுப்பிடியுங்கள், காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல் துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்படுள்ளது” என்றார்.
அப்போது அரசுத் தரப்பில், “ரவுடிகளால் 2 போலீஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை ஏப்.29-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.