விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

“விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீமானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.17) நேரமில்லா நேரத்தின்போது, கோவை, திருப்பூரில் நடைப்பெற்று வரும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவர்கள் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல், நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்திலிருந்து கூலி குறைத்து வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 3 முறை மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, தொழிலாளர்களுக்கு வழங்கும் கூலி உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு ஏற்ப, ‘நியாயமான புதிய நெசவு கூலி உயர்வுடன் நெசவு கூலி உயர்வு ஒப்பந்தப்படி குறைக்காமல் வழங்க நடவடிக்கை கோரி, கடந்த ஜன.12 முதல் இன்று வரை மாவட்ட ஆட்சியர்கள், துறை அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.க்கள் அனைவரிடமும் மனு கொடுத்துவிட்டனர். இதுவரை இவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கடந்த மார்ச் 19 முதல் இன்று வரை 29 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், சோமனூரில் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் 12 பேர் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தினமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். எனவே இந்த அரசு உடனடியாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்” என்று பேசினார்.

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசும்போது, “அரசும் நிலைமையின் தீவிரத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறது. அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இவ்விவகாரத்தில் அரசு முழு கவனத்தோடு உள்ளது. இப்பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று கூறினார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, “விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 ஆக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தினார். அதனால் 1.67 லட்சம் விசைத்தறி உரிமையாளர்களில் 1.27 லட்சம் பேர் 1000 யூனிட்டுக்குள் தான் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். சுமார் 30 ஆயிரம் பேர் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். இத்திட்டத்துக்காக அரசு மானியம் ரூ.571 கோடி வழங்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

அப்போது துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, “விசைத்தறி உரிமையாளர் போராட்டத்தை மார்ச் 19-ம் தேதி தான் தொடங்கினர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், பிப்.27-ம் தேதியே விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மார்ச் 3 மற்றும் 24-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறை மற்றும் கைத்தறி துறை அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளனர். ஏப்ரல் 1-ம் தேதி மேற்கூறியவர்கள் மற்றும் திருப்பூர் மேயர் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து ஏப்.11-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சமரச கூட்டமும் நடைபெற்றது. ஏப்.15-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் 28 சதவீதம் ஊதிய உயர்வு கோரினர். பணி வழங்குவோர் 5 சதவீதம் தர சம்மதித்தனர். பின்னர் விசைத்தறி உரிமையாளர்கள் கூடி பேசி முடிவு செய்துவிட்டு வருவதாக சென்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று அவர் விளக்கம் அளித்தார்.