வக்பு திருத்த சட்டம் இருக்கும்.. ஆனால் செயல்படுத்த முடியாது: வில்சன் எம்பி!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு தொடர்பாக திமுக வழக்கறிஞர் பி.வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.

வக்பு திருத்த சட்டத்தை நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த சட்டத்திற்கு எதிராக 90க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தவெக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு பொதுநல அமைப்புகளும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இரண்டாவது நாள் விசாரணையாக இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக வக்பு கவுன்சில்களில் மாற்று மதத்தினர் உறுப்பினர்களாக இடம்பெறுவது மற்றும் 1995 சட்டத்தின் படி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீண்டும் வகைப்படுத்துவது போன்றவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எனில் ஒரு வார காலத்திற்கு இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். இந்த ஒரு வார காலத்திற்கு இந்த சட்டத்தின் படி நீதிபதிகள் குறிப்பிட்ட விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என உறுதி அளித்தார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்பு சட்டத்தின் படி வக்பு கவுன்சிலில் எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே வக்பு என பதிவு செய்யப்பட்ட சொத்துகளின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டனர். மேலும் வக்பு சட்ட திருத்தம் விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அதன் மீது அடுத்த ஐந்து நாட்களுக்குள் எதிர்மனுதாரர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதையும் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.

இந்த உத்தரவு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுக மாநிலங்களவை எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன். அவர் கூறியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவின்படி, வக்பு திருத்தச் சட்டத்தை எதித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் நான் ஆஜராகி வாதிட்டேன். வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் என வாதிட்டோம். ஒரு இஸ்லாமியர் தனது வாழ்நாளில் வக்பு கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டத்தில் உள்ளது. இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் இந்த திருத்தச் சட்டம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என வாதங்களை எடுத்து வைத்தோம்.

இந்த வழக்கில் நேற்றே இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இன்று வாதம் வைக்க அனுமதிக்கவேண்டும் எனக் கோரியதால் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து விடும் என பயந்து, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வரை வக்பு சொத்துகள் விவகாரத்தில் எந்த தலையீடும் இருக்காது என மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளது. மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று இந்த வழக்கு விசாரணையை 1 வார காலத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர். வேறு ஏதாவது உத்தரவு பிறப்பிக்கக்கூடிய சூழல் இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல உத்தரவை பிறப்பித்துள்ளது.

இஸ்லாமியர்கள், மோட்சத்துக்கு செல்ல சொத்துகளை தானமாக வழங்குவது வழக்கம். அப்படி வாய்மொழியாக வக்பு வழங்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பலவற்றுக்கு ஆவணங்கள் இருக்காது. வாய்மொழியாக வழங்கப்பட்டதற்கு இப்போது ஆவணங்களைக் காட்டி நிரூபிக்க முடியாது. இந்த திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்த சொத்துகள் அரசுக்கு சென்று சேர்ந்துவிடும் என்பது போல் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. வக்பு சொத்துகள் மீது பல கட்டிடங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான ஆவணங்களைக் காட்ட வேண்டும் என இந்த திருத்தச் சட்டம் சொல்கிறது. இன்று வக்பு திருத்தச் சட்டத்தின் சாராம்சங்களை நிறுத்தி வைத்துள்ளனர். வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. வக்பு திருத்தச் சட்டம் இருக்கும். ஆனால், செயல்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.