முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது!

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாகவும், ஆனால் 2 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு அதற்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனக்குமுறலில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இந்நிலையல் கூடுதல் பணியிடங்களை அறிவிக்கக்கோரி முதல்வரை சந்திக்க சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அரசு வெறும் 2 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பணியிடங்களுக்கு மட்டும் போட்டித்தேர்வு நடத்தப்பட்டதால் பட்டதாரி ஆசிரியர்கள் குமுறலில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக தங்கள் குமுறல்களை ஆசிரியர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டித்தேர்வு எழுதினாலும், அதில் வெற்றி பெற்று பணியிடங்களில் சேருவதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் குமுறலில் உள்ளனர்.

இந்நிலையில் போட்டித்தேர்வு எழுதிய கடந்த ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதல் இடங்களை ஒதுக்க கோரியும், பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். தங்களது கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கும் வகையில், பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இப்படி கூட்டமாக சேர்ந்து மனு கொடுக்க வருவதோ அல்லது முதல்வர் மறித்து மனு கொடுப்பதோ தவறு என கூறியதோடு, அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு சென்னை தேனாம்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் அங்கேயும் மண்டியிட்டு மடி ஏந்தியபடியும், தங்கள் கோரிக்கை பதாகையை கையில் ஏந்தியபடியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து அவர்களில் 4 பேரை மட்டும் முதல்வரின் இல்லத்துக்கு அழைத்து சென்று அவரின் தனிச்செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்க செய்து போலீசார் திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பட்டதாரி ஆசிரியர்கள், ‘பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.