பொன்முடி பேச்சு குறித்து அடுத்த கட்ட முடிவை கழக பொதுச்செயலாளர் எடுப்பா: செங்கோட்டையன்!

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி உடன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையனின் இந்த பேச்சு உற்று நோக்க கூடியதாக உள்ளது.

இந்து சமயத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, அனைத்திந்திய அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், “ஒரு அமைச்சர் பதவியேற்கும்போது, இந்தியாவின் உரிமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் தீங்கு விளைவிக்காமல் நடந்து கொள்வேன் என உறுதிமொழி எடுப்பார். ஆனால், பொன்முடி அந்த உறுதிமொழியை மீறி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது வேதனைக்குரியது,” என குற்றம்சாட்டினார். அவரது பேச்சு திமுக அரசின் தடுமாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

“ஒரு அமைச்சர் இப்படி பேசிய பிறகு, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களை கண்டிக்கவே இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன,” என செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவுகளை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமானவர் எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மக்கள் நலன் கருதி அதிமுக மேற்கொண்டு வரும் பணிகளையும் செங்கோட்டையன் எடுத்துரைத்தார். “கோபியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கும், கொடிவேறு அணையை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என அவர் கூறினார்.

மேலும், பன்னாரி அம்மன் கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், அங்கு 25 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடமிருந்து பெற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அந்தியூரில் இரவு நேரங்களில் பேருந்து மற்றும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, 24 மணி நேர போக்குவரத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியம் தாமதமாவது குறித்து பொதுமக்களின் ஆதங்கத்திற்கு பதிலளித்த செங்கோட்டையன், “மூன்று மாதங்களாக ஊதியம் வரவில்லை என மக்கள் கவலைப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில், இதுபோன்ற தாமதங்கள் ஏற்பட்டபோது, மாநில அரசே முன்னின்று நிதி வழங்கி, பின்னர் மத்திய அரசிடம் இருந்து பெற்றது. திமுக அரசு இதைப் பின்பற்ற வேண்டும்,” என வலியுறுத்தினார். இது தொடர்பாக பாஜகவுடன் பேசுவது குறித்த கேள்விக்கு, “இது மக்களின் பிரச்சினை, கட்சி சார்ந்து பேசுவதற்கு இல்லை,” என தெளிவுபடுத்தினார்.