உச்ச நீதிமன்றத்தை விமர்சித்திருப்பது குடியரசு துணை தலைவர் பொறுப்புக்கு ஏற்றதல்ல என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கைவினை திட்டத்தை இன்று (ஏப். 19ம் தேதி) தொடங்கி வைத்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூர் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுநர் மசோதாக்களை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆளுநர் அதிகாரம், அரசியல் சாசனப்படி மாநில சட்ட மசோதாவை கால தாமதப்படுத்தக்கூடாது. மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநர், குடியரசு தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசின் ஆலோசனைப்படியும், மாநில சட்டப்பேரவைக்குட்பட்ட ஆளுநர் செயல் படவேண்டும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து ஆளுநர்கள் மற்றும் தலைமை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்வது எதிர்பார்த்ததுதான். குடியரசு துணை தலைவர் ஜக்தீஷ் தன்கர் உச்ச நீதிமன்றத்தை தவறாக, மோசமாக விமர்சித்துள்ளார். கடுமையான அவரது விமர்சனம் அவர் பொறுப்புக்கு ஏற்றதல்ல. ராஜ்யசபாவில் 145 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தபோது ராஜ்யசபா உயர்ந்ததென்று தெரியாதா?
சட்டம் இயற்றும் மக்களவையை விட உச்ச நீதிமன்றம் உயர்ந்த அமைப்பா என கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப் பேரவையும் சட் டமியற்றும் உயர்ந்த இடம்தானே. அதனை ஆளுநர் எதிர்ப்பதும் பொறுப்பற்ற செயல்தானே.
அமைச்சர் பொன்முடி என்றில்லை, ஆண்கள் யாரும் பெண்களை கண்ணியமின்றி தரமற்ற முறையில் விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்முடி மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என வீர வசனம் பேசி வந்த அதிமுக, வேறு வழியின்றி பாஜக மிரட்டலால் அமித்ஷாவின் கட்டளைக்கு அடிப்பணிந்துள்ளது. அமித் ஷா கூட்டணி ஆட்சி என கூறியுள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்தால் தானே. திமுக கூட்டணி 2026-ம் ஆண்டிலும் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நல்ல மனம் கொண்ட எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவின் நிலை வருந்ததக்கதாக மாறியுள்ளது. அதிமுக முழு பலத்துடன் சந்திக்கும் கடைசி தேர்தல் இதுவாக இருக்கும்.
காஷ்மீர், பஞ்சாப், பிஹார், வடகிழக்கு மாகாணங்கள், கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கூட்டணி வைத்து கட்சிகளின் நிலை அனைவரும் அறிந்ததே அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அமைப்புகளை பயன்படுத்தி மாநில கட் சிகளை பாஜக கபளீகரம் செய்து வருகிறது. இயல்பாகவே அதிமுகவுக்கு பாஜக மீது வெறுப்பு உள்ளது. பாஜக தமிழகத்தையே கடுமையாக வெறுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.