எத்தனை படை, பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார்: திருச்சி சிவா!

“எத்தனை படையோடு வந்தாலும், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

விருதுநகரில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, “புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் எவ்வாறு செயலாற்ற வேண்டும், நடைபெற உள்ள தேர்தலில் அவர்களது பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இந்த முகாம் ஆக்கபூர்வமாக இருந்தது. இதில் பங்கேற்றோர் தேர்தல் காலம் வரை முழு கவனம் செலுத்திட வேண்டும் என்பதை மையப்படுத்தி இக்கூட்டம் நடத்தப்பட்டது” என்று கூறினார்.

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது, தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கனவு சிலருக்கு இரவில் வரும், சிலருக்கு பகலில் வரும். எது வர வேண்டும் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. ஒரு அரசியல் கட்சி நாங்கள் வலிமையாக உள்ளோம் என்று கூறுவதோடு, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது இயற்கைதான். ஆனால், எது நடக்கப்போகிறது என்பதை தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது.

திமுக தலைவராக உள்ள ஸ்டாலின், முதல்வராக இருந்து செய்துவரும் தொண்டு, ஆட்சியில் இருந்து அவர் செய்துவரும் பணிகள், அனைத்துப் பகுதிகளிலும் அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர், சிறுபான்மையினருக்கு எதிராகவும், மாநில நலனுக்கு எதிராகவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள பாதகமான சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவை இந்தியா முழுவதும் வியர்ந்து பார்த்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எங்கள் பணியும், ஆற்றியுள்ள தொண்டும் மக்களை எங்கள் பக்கம் நிற்கச் செய்யும்.

எத்தனை படையோடு வந்தாலும், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். எங்கள் கூட்டணி ஆரம்ப காலத்திலிருந்து சரியான பாதையில் தெளிவான நோக்கத்தோடு பயணிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். மாநில நலன், மாநிலங்களின் ஆட்சி அதிகார உரிமை, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க வேண்டும். ஒற்றைத் தன்மை என்பது ஏற்புடையது இல்லை. இது பன்முகத் தன்மையுடைய நாடு என்ற கொள்கையோடு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். இதை வேறு பெயரில் அழைத்தால் சரியான புரிதல் இல்லை என்று அர்த்தம்.” என்று கூறினார்.