நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஏராளமான அரசு விளம்பரங்களை மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்கள் கொடுத்துள்ளனர் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், ரூ.5,000 கோடி அளவுக்கு சொத்துக்களை, யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையானது, காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் போல செயல்பட்டு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மற்றொரு ஊழல் மாடல் போன்றது இது. அந்தப் பத்திரிகைக்கு மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்கள் ஏராளமான அரசு விளம்பரங்களைக் கொடுத்து வளர்த்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு, ஒரு பத்திரிகையாகவே இருந்ததில்லை. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் செய்தித்தாள்கள் என்றால் அது அச்சிடப்படவேண்டும். ஆனால் சில பத்திரிகைகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். அவை அச்சிடப்படாது.. விற்பனை செய்யப்படாது.. விநியோகமும் செய்யப்படாது. அதைப் பார்க்கவே முடியாது. முக்கியமாக அதைப் படித்திருக்கவே முடியாது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையும் அந்தப் பிரிவில் வரக்கூடிய செய்தித்தாள்தான்.
காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், பத்திரிகைக்கு நிதி தருவதற்குப் பதிலாக அரசு விளம்பரங்கள் என்ற கூறி லட்சக்கணக்கான ரூபாய்களை நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைக்கு கொடுத்துள்ளனர்.
பல்வேறு பதிப்புகள் வைத்துள்ள தினந்தோறும் வெளியாகும் செய்திப் பத்திரிகைகளுக்கு சில விளம்பரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ஆனால் வாராந்திர பத்திரிகையான நேஷனல் ஹெரால்டுக்கு அதிக அரசு விளம்பரங்கள் காங்கிரஸ் முதல்வர்களால் தரப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஊழல் மாடல்களில் இதுவும் ஒன்று.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கூட, செய்திப் பத்திரிகைகளுக்கு குறைந்த செலவில் சில விளம்பரங்கள் மட்டுமே தரப்படுகின்றன. ஆனால் நேஷனல் ஹெரால்டுக்கு அதிக விளம்பரம் அள்ளித் தரப்படுகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கையும், களவுமாக சிக்கியுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் பதற்றம் அடைகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை பார்த்தால், சுதந்திரம் பெற்றதில் இருந்து பல ஊழல்களில் காங்கிரஸ் சிக்கியுள்ளது. அதில் இதுவும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.