சுதந்திரத்தை கேட்பதற்கான தைரியத்தை இந்தியர்களுக்கு நேரு வழங்கினார்: ராகுல் காந்தி!

சுதந்திரத்தை கேட்பதற்கான தைரியத்தை இந்தியர்களுக்கு நேரு வழங்கினார். பயத்தை எதிர்கொள்ளவும், உண்மையின் பக்கம் நிற்கவும் நேரு கற்பித்தார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சந்தீப் தீட்சித்துடன் நடத்திய உரையாடல் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த உரையாடலில் நாட்டின் முதல் பிரதமரும், தனது கொள்ளு தாத்தாவுமான ஜவஹர்லால் நேரு குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நேரு நமக்கு அரசியலை கற்பிக்கவில்லை. மாறாக பயத்தை எதிர்கொள்ளவும், உண்மையின் பக்கம் நிற்கவும் கற்பித்தார். அடக்குமுறையை எதிர்த்து இறுதியில் சுதந்திரத்தை கேட்பதற்கான தைரியத்தை இந்தியர்களுக்கு அவர் வழங்கினார்.

அவரது மிகப்பெரிய மரபுதான் நான் இடைவிடாமல் உண்மையைப் பின்தொடர்வதற்கான காரணமாக உள்ளது. நான் பின்தொடரும் அனைத்துக்கும் காரணமான கொள்கையாக இருக்கிறது. எனது கொள்ளு தாத்தாவிடம் இருந்து நான் பெற்றது உண்மையும், துணிச்சலும் ஆகும். அவர் வெறும் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு தேடுபவர், சிந்தனையாளர், ஆபத்தை புன்னகையுடன் எதிர்கொண்டு வலிமையாக வெளியே வந்தவராக இருந்தார்.

நேரு, தான் நேசித்த மலைகளில் ஒரு பனிப்பாறையில் விழுந்து விடும் நிலைக்கு சென்றது, விலங்குகள் எப்போதும் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது, உடற்பயிற்சியை கைவிடாதது போன்றவை பற்றி எனது பாட்டி (இந்திரா) எனக்கு கூறியிருக்கிறார்.

எனது தாய் இப்போதும் தோட்டத்தில் பறவைகளை பார்த்து ரசிப்பார். நான் ஜூடோ பயிற்சியில் ஈடுபடுவேன். இவை வெறும் பொழுதுபோக்குகள் மட்டுமல்ல, நாம் யார் என்பதை அறிவற்கான ஜன்னல்கள். நாம் கவனிக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் நாம் இணைந்திருக்கிறோம்.

பயத்துடன் எப்படி நட்பாக இருப்பது என்பதைத்தான் காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கற்பித்தனர். எந்தவொரு பெரிய மனித முயற்சியும் பயத்தை எதிர்கொள்வதில் இருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் அகிம்சையை பின்பற்றுவதாக இருந்தால் உண்மைதான் உங்கள் ஒரே ஆயுதம். அவர்களுக்கு என்ன நடந்தாலும், அவர்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை. அதுதான் அவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றியது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.