விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை இரு வழிச் சாலை என்ற நிலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தில்லியில் சந்தித்து பேசினேன். திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி விரிவான கடிதம் எழுதியிருந்தேன். திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை இரு வழிச் சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், விபத்துகளைத் தவிர்க்க அதை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் நான் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாகவும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கடிதம் மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.