தமிழகத்தில் சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுகிறது: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை தி.நகர் பவர் ஹவுஸ் அருகில் உள்ள காமராஜர் காலனியில் தமிழக பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. உறையூரில் குடி தண்ணீரில் கழிவு நீர் கலந்து ஒரே பகுதியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி தண்ணீரை கொடுப்பதற்கு கூட ஸ்டாலின் அரசால் முடியவில்லை. மக்கள் மீது கவனம் செலுத்தாமல் தேவையில்லாத விஷயங்களில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. ஆளுநரை தபால்காரர் என்கிறார்கள். அப்படியென்றால், திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது, ஆளுநரிடம் ஏன் கோரிக்கைகளை வைத்தார்கள். ஏன் ராஜ்பவனை மிதித்தார்கள். எதிர்கட்சியாக இருக்கும் போது அவர்களுக்கு ஆளுநர் தேவைப்படுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும் போது தேவையில்லாதவராகிறார்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் கத்தியோடு வருகிறார்கள். அறிவாற்றல் நிகழவேண்டிய பள்ளிகளில் அரிவால் நடமாடுகிறது. தமிழகத்தில் சாதிய பாகுபாடு அதிகமாக தலைவிரித்தாடுகிறது. இந்த ஆட்சியில் சமூக நீதியும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் மற்ற மாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கைக்கு பிரதமர் சென்று வந்ததை பற்றி வைகோ கட்சியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். மதிமுக சிறிய கட்சி. அந்த கட்சிக்குள் நடக்கும் பிரச்சினையையே அவர்களால் பார்க்கமுடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்து வருகிறார். முதலில் அவர்கள் தங்கள் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினையை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.