மக்களாட்சியை வலுப்படுத்தும் குடிமைப் பணியாளர்களுக்கு வாழ்த்து: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தேசிய குடிமைப் பணிகள் நாளில், நமது மக்களாட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் உறுதிப்பாடு மிக்க குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஆட்சியியல் கொள்கைக்கும் மக்களுக்கும் இடையேயான முக்கியத் தொடர்புக் கண்ணியாக விளங்கும் குடிமைப்பணி அலுவலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தொலைநோக்கினைத் தாக்கமிகுந்த செயல்பாடாகக் களத்தில் மாற்றிக் காட்டுபவர்கள் ஆவர்.

சமத்துவம், செயல்திறன், இரக்கம் ஆகியவற்றுடன் அனைத்துக் குடிமக்களையும் அவர்களுக்குரிய மாண்புடன் அணுகும் ஆட்சிநிர்வாகத்தினை உறுதிசெய்யத் தமிழ்நாடு உழைக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.