திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் இறப்பு என்பது உண்மை அல்ல: அமைச்சர் நேரு!

திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். குளிர்பானங்கள் அருந்தியதால் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார்.

திருச்சி உறையூர் 10 வது வார்டு பகுதியில் பல இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இப்பகுதியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக 4 வயது சிறுமி உட்பட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது! மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத அரசாக இருக்கிறது இந்த திமுக அரசு. உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி உறையூரில் வெக்காளி அம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் மோர், குளிர்பானங்கள் வழங்கி வருகிறார்கள். அந்த குளிர்பானத்தை அருந்தியதால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி எனது திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்டது. இப்போதுதான் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு அப்பகுதிகளில் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இறந்த குழந்தையின் குடும்ப மருத்துவர், குடிநீர் காரணமாக மரணம் நிகழவில்லை எனச் சான்று அளித்துள்ளார்.

குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக சம்பவம் அந்தப் பகுதியில் உறுதியாக இல்லை. நான் தினந்தோறும் அந்தப் பகுதியைச் சுற்றி வருபவன். 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருக்கிறேன். திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ஐந்தரை கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். எங்கோ ஒரு இடத்தில் சிறிய தவறு ஏற்பட்டிருந்தால் அதனை பிரதானப்படுத்தக்கூடாது. அதனை சரி செய்வோம். கண்டிப்பாக ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

திருச்சி சம்பவத்தை பொறுத்தவரை அது குடிநீரால் ஏற்பட்டது அல்ல. பிரியங்கா என்ற குழந்தை இறந்ததற்கு குடிநீர் காரணம் அல்ல. நீர் மோர், குளிர்பானங்கள் அருந்தியதன் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.