டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் வழிபாடு!

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் 4 நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தனர். மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் விமான நிலையத்தில், அவர்களை வரவேற்றார். துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அவர்களுக்கு கோயிலின் கட்டிடக் கலை நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஜே.டி. வான்ஸ் – உஷா சிலுகுரி தம்பதியரின் 3 குழந்தைகளும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து இந்தியா வந்தனர். இரு மகன்களும் பைஜாமா குர்தா அணிந்திருந்தனர். மகள், அனார்கலி பாணியிலான சிறிய உடையை அணிந்திருந்தார். இந்திய உடைகளில் அவர்கள் வந்திருந்தது காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வழிபாட்டை முடித்துக்கொண்டு அவர்கள் 5 பேரும், கோயிலின் முன்பாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.