நிதியும் இல்லை.. அதிகாரமும் இல்லை: சட்டசபையில் அமைச்சர் பிடிஆர்!

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு இன்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய பதில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதங்கத்தோடு பதில் அளித்த நிலையில், சபாநாயகர் அப்பாவு அவரை மென்மையாக கண்டிக்கும் வகையில் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்று சட்டமன்றக் கூட்டத்தில், தனது தொகுதி மேம்பாடு குறித்து அதிமுக எம்.எல்.ஏ ஜெயசீலன் கேள்வி எழுப்பினார். “எனது கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே, எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்காவினை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்” என்று கேள்வி எழுப்பினார் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன்.

அதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை நான் கூறியிருக்கிறேன். நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படுவதில்லை. தொழில் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுட்பத்துறை வசம் இருக்கிறது. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில்துறை வசம் இருக்கும் அசாதாரண நிலையே 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்கிறது. எனவே, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” என்று கூறினார்.

அமைச்சரின் இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத சபாநாயகர் அப்பாவு, “இது எல்லாம் உள்ளுக்குள்ளே முதல்வரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாக பதில் சொன்னால் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முதல் முறையாக அமைச்சரான பிடிஆருக்கு முக்கியமான துறையான நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இலாகாவை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதன்பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டது. நிதித்துறைக்கு தங்கம் தென்னரசு அமைச்சராக நியமிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் ஆக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அமைச்சர் பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோ முற்றிலும் போலியானது என்று பழனிவேல் தியாகராஜன் மறுத்தார். எனினும், அதன்பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆரின் இலாகா மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இன்று சட்டசபையில் அதிருப்தியோடு பேசியுள்ளார் அமைச்சர் பிடிஆர்.