தமிழக சட்டசபையில் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் வழக்கமான நிகழ்வுகள் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்றைய தினம் காலமானார். அவரது உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை போல் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.