பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: தங்கம் தென்னரசு!

“அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22) கேள்வி நேரத்தின்போது மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், “மதுராந்தகம் சார்நிலைக் கருவூலத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “புதிய கட்டிடம் கட்ட வருவாய்த்துறை சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையிடம் விரிவான திட்ட அறிக்கை பெற்றபின் மதுராந்தகம் சார்நிலைக் கருவூலம் அலுவலக கட்டிடம் கட்டப்படும்” என்றார்.

தொடர்ந்து, மகரதம் குமரவேல், “லட்சக்கணக்கான தமிழக அரசு ஊழியர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து அமைச்சர்களாக அமர வைத்துள்ளனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி, அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழக அரசு ஊழியர்கள் நலனில் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்து வருகிறார். அவர்கள் எதிர்பார்த்த வகையில் எனது பட்ஜெட் உரையில் பல திட்டங்களை அறிவித்திருக்கிறேன்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அரசு சார்பில் ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவுக்கு கால வரையறை தரப்பட்டுள்ளது. பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்களுடன் தங்கள் கருத்துகளை தந்துள்ளன. அதை பரிசீலித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு எடுக்கும்” என்று அவர் கூறினார்.