இந்தியா தனது சந்தைகளை அமெரிக்காவுக்காக அதிகமாக திறக்க வேண்டும், அமெரிக்க எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்று என்று இந்தியா வந்துள்ள அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜே.டி. வான்ஸ் கூறியதாவது:-
இந்திய சந்தைகளை அமெரிக்கா அதிக அளவில் அணுக விரும்புகிறது. எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் வாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து சாதிக்கக் கூடியவை ஏராளம். இந்தியாவும் அமெரிக்காவும் பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படுகின்றன. 21 ஆம் நூற்றாண்டின் எதிர்காலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வலிமையால் தீர்மானிக்கப்படும்.
வர்த்தக உறவுகள் நியாயத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைக்க அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கிறார். அப்போதுதான், இந்தியா போன்ற நண்பர்களுடன் இணைந்து சிறந்த எதிர்காலத்தை அமெரிக்காவால் உருவாக்க முடியும்.
பாதுகாப்புத் துறையில் நமது நாடுகள் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. மேலும் நாம் பல ராணுவ தளங்களை ஒன்றாக உருவாக்க முடியும். பிரதமர் மோடிக்கு இருக்கும் நம்பகத்தன்மையின் அளவு எனக்கு பொறாமையை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பதை நேற்றிரவு நான் அவரிடம் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.